Wednesday, July 30, 2014

தமிழ் தாய் கோவில்

                         மதுரையில் அமைக்கப்பட உள்ள தமிழ் அன்னை சிலை

தமிழ் மொழிக்கு சங்கம் அமைத்து தமிழை வளர்த்த மதுரை மாநகரில் 100 கோடி ரூபாயில் தமிழ் அன்னைக்கு சிலை நிறுவ உள்ளதாக தமிழக முதல்வர் கடந்த வருடம் (14/05/2013) சட்ட சபையில் விதி எண் 110 - ன் கீழ் அறிவித்திருந்தார். தமிழ் தாய்க்கு பிரம்மாண்ட சிலை அமைப்பதன் மூலம் உலகளவில் தமிழின் புகழை அழுத்தமாக நிலைநாட்ட இயலும் என்கின்றனர் ஒரு பிரிவு மக்கள். மற்றொரு பிரிவு மக்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அந்த 100 கோடி ரூபாயை பயன்படுத்தலாம் என்கின்றனர்.
இச்சூழலில் மொழியை கடவுளாக வணங்கி வரும் தமிழர்கள், தமிழ் மொழியின் கடவுளாகிய தமிழ் தாய்க்கென தனியொரு கோயிலை காரைக்குடியில் அமைந்துள்ள கம்பன் கழக வளாகத்தில் நிறுவியுள்ளனர்.
                                                                  சா. கணேசன்

கோவில் அமைப்பதற்கான காரணம் என்ன?
தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சா. கணேசன் தமிழ் தாய்க்கு கோவில் நிறுவ விரும்பினார். அதுமட்டுமல்லாது உலகளவில் தமிழ் மொழியின் சிறப்பினை உணர்த்த அவர் எண்ணினார். அதனடிப்படையில் தமிழக அரசிடம் மொழிக்கென கோவில் கட்டுவதற்கு நிதி அளித்து உதவுமாறு முறையிட்டார். அவரது முயற்சியினால் கடந்த 1975 ஆம் ஆண்டு தமிழ் தாய்க்கு கோவில் கட்டுவதற்கு நிதி அளித்து உதவியது தமிழக அரசு. அந்த நிதியைக் கொண்டு சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் கணபதி ஸ்தபதி தமிழ் தாய்க்கான சிலையை வடிவமைத்தார். அதற்கு தமிழ் அறிஞர்களும் உதவ, சா. கணேசன் அவர்களின் தலைமையில் கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றன.
1993 முதல் பொதுமக்கள் தமிழ் தாயை வழிபட துவங்கினர்
தொடர்ச்சியாக 18 ஆன்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் 1993 ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டில் திருவள்ளுவர் தினத்தன்று தமிழ் தாய் கோவிலை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பொது மக்கள் தமிழ் அன்னையை வழிபடத் துவங்கினர்.
                                                            தமிழ் தாயின் சிலை
தமிழ் தாயின் சிலைத் தோற்றம்
ஒளிச் சுடர், யாழ், ருத்ராக்ஷ ஜப மாலை, ஓலைச் சுவடி முதுளிவற்றை நான்கு கைகளில் கொண்டுள்ள தமிழ் தாய் கமல மலர் மீது அமர்ந்திருக்கும் நிலையில் மக்களுக்கு காட்சியளிக்கிறார். தமிழ் தாயின் சிலை கல்வி தெய்வமான கலைவாணியை ஒத்துள்ளவாறு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
                                                                      கோவில்
கோவிலின் அமைப்பு முறை
ஆறு விமானங்கள் கொண்ட கோவிலின் கருவறையில் தமிழ் தாயும், பக்கவாட்டில் அகத்திய முனிவரும், தொல்காப்பியரின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் வெளிப்புறத்தை சுற்றி கம்பர், வள்ளுவர் மற்றும் இளங்கோவடிகளின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் வாயிற் பகுதியில் ஒளித் தாய் மற்றும் வரித் தாய்க்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆராதனை மற்றும் வழிபாட்டு முறைகள்
தமிழ் இலக்கியங்களை மந்திரமாக தமிழ் அறிஞர்கள் ஓத, அதனை அமர்ந்த நிலையில் செவி கொடுத்து ரசித்து வருகிறார் தமிழ் தாய். மத பேதமின்றி தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களும், தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களும் தமிழ் தாயை வழிபாட்டு வருகின்றனர் பொது மக்கள்.
தமிழ் தாய் கோவில் இன்று உலக மக்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பினை உணர்த்தி வருகின்றது.......

Tuesday, July 29, 2014

கோலக்கலை



தமிழ் வீடுகளின் வாசல்களில் செடிகளே இல்லாமல் பூக்கும் பூவாக கோலங்கள் தினந்தோறும் பூக்கின்றன. பழங்காலம் முதல் இது நாள் வரை தமிழர்களின் பண்பாடோடு தொடர்ந்து வருகின்றது கோலக்கலை. கோலம் என்பது அழகினை குறிக்கின்றது. கோலக்கலையை சித்ரக்கலா எனவும் குறிப்பிடுவர்....

வரலாறு
தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னதாகவே கோலமிடும் பழக்கம் இருந்தமையாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். துவக்கத்தில் கோலங்கள் கோடுகளாக தரையில் வரையப்பட்டுள்ளன. காலப்போக்கில் கோலம் வரைவதற்கு கைகள் பழக்கமான பின்னர் பல்வேறு வடிவங்கள் அடங்கிய கோலங்கள் தீட்டப்பட்டன.
அரசர்கள் போரில் வெற்றி பெற்று நாடு திரும்புகின்ற நேரங்களில் ஆரத்தி எடுத்து, அந்நீரை வாசலில் உள்ள கோலத்திற்கு கொண்டுச் சென்று கொட்டும் பழக்கம் இருந்துள்ளது.
அதே போல் மகாபாரதம், இராமாயாணம் போன்ற இதிகாச நூல்களில் கோலங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல் வாசலில் கோலமிடுவது தமிழரது மரபாக கடைபிடிக்கப்பட்டது.

கோலம் இடுவதன் நன்மைகள்
வாசலில் பசுவின் சாண நீரைத் தெளித்து, அரிசி மாவினால் ஆரம்பக் காலங்களில் கோலங்களை தீட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். அதன் மூலம் மண்ணில் ஊரும் உயிரினங்களுக்கு கோலமாவு உணவாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் அரிசி மாவினை பயன்படுத்தி கோலங்களை தீட்டியுள்ளனர்.
பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வாசலை சுத்தம் செய்து கோலமிடுவது அருமையான உடற்பயிற்சி என்கின்றனர் மருத்துவர்கள். நீண்ட நேரம் குனிந்தும், நிமிர்ந்தும், விரல்களை பயன்படுத்தியும் கோலம் தீட்டுவது எலும்புகளுக்கு நல்லது என்கின்றனர்  மருத்துவர்கள்.
அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதன் மூலம் வீடுகளுக்குள் கிருமிகளும், பூச்சிகளும் அதிகம் அண்டாது எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிகாலைப் பொழுதில் காற்று தூய்மையாக இருப்பதாலும், குளிர்ந்தக் காற்று வீசுவதாலும், சூரியன் உதிப்பதற்கு முன்பே கோலமிடுவது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்பதால் நமது முன்னோர்கள் பெண்களின் கடமையாக இதனை கடைபிடித்துள்ளனர்.
மேலும் கோலங்கள் வெண்ணிற மாவினால் வரையப் படுவதனால் அதனை பார்க்கும் பொழுது மன நிம்மதியும், ஒழுக்கமும் வீடுகளில் மேலோங்கும்.


கோலத்தின் வகைகள்
தமிழர்களது பண்பாட்டில் ஒன்றான கோலம் பல்வேறு வகையாக வரையப்படுகின்றன. மாக்கோலம் (அரிசி மாவு), புள்ளிக் கோலம், இழைக் கோலம், சிக்கு கோலம், அங்கக் கோலம், ரங்கோலி, மணற் கோலம், வெள்ளைக்கல் மாவுக் கோலம், பூக் கோலம், பயறு கோலம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாக காட்டுவதற்கு காவி நிறத்தையும் பயன்படுத்துவர். மேலும் வண்ண நிறங்களை பயன்படுத்தியும் கோலங்கள் வரையப் படுகின்றன. மார்கழி மாதங்களில் வண்ணக் கோலங்களின் மத்தியில் சாண உருண்டை பிடிக்கப்பட்டு, அதன் மேல் பரங்கி பூவை வைத்து அலங்கரிப்பதும்  தமிழர்களின் வழக்கம்.

பிற மாநிலங்களில் கோலங்கள்
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மஹா ராஷ்டிரா, ராஜஸ்தான், போன்ற மாநிலங்களிலும் கோலங்கள் தீட்டப்படுகின்றன.


தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கோலத்தின் நிலை?
தற்போதும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பெண்கள் கோலங்களை தீட்டி வருகின்றன. கடந்த 30 - 40 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தற்போது  கோலங்கள் தீட்டப்படுவது 10 சதவிகிதம் குறைந்துள்ளது.
பெரும்பாலும் விழாக் காலங்களிலும், மார்கழி மாதம் மற்றும் கோலப் போட்டிகளில் மட்டுமே வண்ணப் பொடிகளை பயன்படுத்தி பெரிய அளவில் கோலங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் நட்சத்திர வடிவிலும், புள்ளி கோலங்கள் மட்டுமே இடப்பட்டு வருகின்றன.
கோலங்கள் தற்போதும் தமிழக வீடுகளின் வாசலில் தீட்டப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.