Wednesday, August 13, 2014

தப்பு (பறை மேளம்) - தமிழிசை


தமிழர்களின் ஆதி கலை வடிவம் தான் பறை மேளம். இதனை தப்பு என்றும் மக்கள் அழைப்பர். தப்புதல் என்பதற்கு அடித்தல் எனவும் தமிழில் பொருளுள்ளது. கற்காலம் துவங்கி இன்று வரையில் தமிழர்களின் வாழ்வோடு இணைந்து பயணித்து வருகின்ற இசைக்கருவி பறை மேளம்.
திருவிழாக்கள், மங்கல மற்றும் அமங்கல விஷயங்கள் என அனைத்திலும் ஓங்கி ஒலிக்கின்ற இசை தான் பறை மேளம்.
மொத்தத்தில் பறை தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவி என்பதால் இது தமிழிசை.
வரலாறு
பல நூற்றாண்டுகளாக பறை இசை தமிழகத்தில் ஒலித்து வருகின்றது. இதற்கு சான்றாக திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், நிகண்டு, தேவாரம், புறநானூறு, நன்னூல், தொல்காப்பியம், திருப்புகழ் முதலிய சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
என்றக் குறளின் மூலம் பறையை சுட்டிக்காட்டியுள்ளார் வள்ளுவர்.
அதுமட்டுமல்லாது பண்டையத் தமிழர்களின் நிலவியல் பகுதிகளுக்கு ஏற்றவாறு வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமாக பறை வாசிக்கப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் இன்று வரை மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றது பறை இசை. மக்களுக்கு அரசர் தெரிவிக்க விரும்பும் செய்திகளையும், போரில் வெற்றி பெற்றதை அறிவிப்பதற்காகவும், விவசாயத் தொழில்களிலும், கூத்துகளிலும், வழிபாடு, விழாக்கள் மற்றும் துக்க வீடுகளிலும் பறை இசைக்கப்பட்டுள்ளது.
கட்டபொம்மனும், பாண்டிய மன்னனும் பறை இசையை கேட்டு ரசித்துள்ளனர் என்கிறது ஆய்வுகள்.

பறை மேளத்தின் வடிவமைப்பு மற்றும் வாசிக்கும் முறை
மரத்திலான வட்ட வடிவ சட்டத்தில், உயிர் நீத்த விலங்கின் (மாடு) தோளினை பதப்படுத்தி, பக்குவத்திற்கு வந்த பின்னர் அதனை பசை மூலம் மாற சட்டத்தோடு ஒட்டி தப்பினை உருவாக்கியுள்ளனர் ஆதி தமிழர்கள்.
இரு குச்சிகளைக் கொண்டு பறை மேளம் வாசிக்கப்பட்டு வருகின்றது. தங்கள் என்னத்திற்கு ஏற்றார் போல் குச்சிகளை வேகமாகவும், நிதானமாகவும் வாசித்து பறையிலிருந்து ஒலியை எழுப்புவர்.
கர்நாடக சங்கீதம் போன்று தமிழிசையான பறைகென்று ராக தாளங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதனால் பெருமுபாலும் சொற்றடர்களை அடிப்படையாகக கொண்டே பறை இசைக்கப்பட்டு வருகின்றது. இவையனைத்தும் நமது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து உருவானவை.
தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டு என பல்வேறு ரகங்கள் பறையிசையில் உண்டு.
சமயத்தில் பறை இசைப்பவர்கள் மேளத்தின் மெட்டுக்கு ஏற்றவாறு நடனமும் ஆடுவர். அதனை பறையாட்டம் எனவும் அழைப்பர்.
தற்போது இரும்பு சட்டத்தைக் கொண்டும், பைபர் வடிவிலான இழைகளை கொண்டும் பறை மேளம் தயாரிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பறை இசையை கேட்கும் பொழுது மக்கள் மனதில் ஆனந்தமும், துள்ளலும் எழுகின்றது என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். அதனால் நான் தான் பறை இசையைக் கேட்டவுடன் நடனமாடுவதாகவும் கூறுகிறார்கள்.
பறையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் கிராமியக் கலைகளும் தோன்றியுள்ளன.
தமிழகத்தில் தற்போது பறையிசையின் நிலை?
பல்வேறு இசைக்கருவிகளின் வளர்ச்சியினால் பறை மேளங்களை முக்கிய விழாக்களில் வாசிப்பது குறைந்து வருகின்றது. இருப்பினும் தமிழரின் பாரம்பரிய இசை வடிவமாக கருதப்படும் பறை இசையை பல்வேறு தமிழர்கள் வளர்த்து வருகின்றனர்.

சாதி மத பேதமின்றி அனைத்து சாதியினரும் பறை இசையை கற்க முன்வர வேண்டுமென்ற நோக்கத்தில் சென்னை அருகே புத்தர் கலைக் குழுவை நிறுவி அதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயிற்சி அளித்து வருகிறார் மணிமாறன் என்ற தமிழர். பறையின் மீதுக் கொண்ட ஆர்வத்தினால் பறையிசையின் குறிப்புகளை சேகரித்து அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறார் அவர்.
அதேபோல் புதுவை அருகே உள்ள தமிழகப் பகுதியான சின்னக் கோட்டக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தமிழரசன், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக தப்பு வாசித்து, அதில் கிடைக்கும் வருவாயின் மூலம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, பள்ளிப் படிப்பையும் தொடர்ந்து வருகிறார். எதிர்காலத்தில் பாரம்பரிய வாத்தியமான தப்பினைக் கொண்டு இசையுலகில் சாதிக்க விரும்புகிறார் அவர்.
                                                                         தமிழரசன்

உலகளவிலும் பறையின் புகழை பரப்ப முயற்சித்து வருகின்றனர் வெளிநாடு வாழ் தமிழர்கள்.
இவர்களைப் போன்றே ஒவ்வொரு தமிழரும் பாரம்பரிய இசைக் கருவியான பறையை போற்றி, அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்......


 

No comments:

Post a Comment