Wednesday, August 20, 2014

உலக மொழிகளில் திருக்குறள்





 
உலகப் பொதுமறையான திருக்குறள் உலகளவில் பேசப்பட்டு வரும் பல்வேறு விதமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் அவர்களது தாய்மொழியில் திருக்குறளை மொழிப் பெயர்த்துள்ளனர். தற்போதும் திருக்குறளை பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்து வருகின்றனர்.

அதற்காக தமிழக அரசும் உதவி வருகின்றது. வாழ்வியல் நூலாகப் போற்றப்படும் திருக்குறள் மனிதர்களுக்கு தேவையான பண்புகளை எடுத்துரைக்கின்றன. சுமார் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் வள்ளுவரால் எழுதப்பட்டது.

மனிதர்களின் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தும் இந்நூலில் அடங்கியுள்ளதால் ஆங்கிலம், செக், டச்சு, பின்னிச், பிரெஞ்சு, ஜெர்மன், ஹங்கேரியன், இத்தாலி, லத்தின், பாலிஷ், ரஷ்ஷியன், ஸ்பேனிஷ், ஸ்வேடிஷ் (Swedish), கிரேக்கம், போர்ச்சுகீஸ் ஆகிய உலக மொழிகளிலும், கொரியன், ஜப்பானீஷ், சீனம், அரபி, பர்மீஸ், மலாய், சிங்களம், உருது ஆகிய ஆசிய மொழிகளிலும், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொக்காணி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சவ்ராஷ்ட்ரம், தெலுங்கு, வாக்ரிபோலி, சந்தால் முதலிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய மொழிகளோடு சேர்த்து இதுவரை சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கணினி யுகத்தில் - திருக்குறள்

கணினி யுகமான 21 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு, ஹிந்தி, கன்னடம், ரஷியம், மலையாளம், ஆங்கிலம், அரேபி, கொங்கனி, மராத்தி, லத்தின், சமஸ்கிருதம், சிங்களம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள திருக்குறள் நூல்கள் அனைத்தும் இணையத்தின் மூலம் இலவசமாக படிக்கலாம்.
 

அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை பயன்படுத்தியும் திருக்குறளை இலவசமாகப் படித்துப் பயன் பெறலாம். தற்போது Softcraft எனப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை வடிவமைக்கும் நிறுவனம் திருக்குறளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியுடன் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய அப்ளிகேஷனை மு., கலைஞர் கருணாநிதி, சாலமான் பாப்பையா மற்றும் ஜி.யு. போப் ஆகியவர்கள் எழுதிய திருக்குறளுக்கான அர்த்தத்தின் அடிப்படையாகக் கொண்டு பொருளும் அளிக்கின்றது.
 

சீன மொழியில் திருக்குறள்

தைவானில் வசிக்கும் யுஹிசி என்ற கவிஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து திருக்குறளை தற்போது சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழக அரசின் முயற்சியினால் சீன மொழியில் திருக்குறள் வெளிவர உள்ளது. அதற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலையின் முனிவர்களும், தமிழ் அறிஞர்களும் உதவி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட திருக்குறள் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒளி மற்றும் ஒலி வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாரெங்கும் பரவட்டும் திருக்குறளின் புகழ்....

 

No comments:

Post a Comment