Monday, August 4, 2014

திருக்குறளுக்கு தொடர்ச்சியாக 133 மணி நேரம் பரதநாட்டியம் ஆட உள்ளார் இளம் பெண் ஒருவர்


கிருத்திகா
 
உலகப் பொதுமறையான திருக்குறளிலுள்ள 1330 குறட்பாக்களுக்கும் தொடர்ச்சியாக 133 மணி நேரம் பரதம் ஆட உள்ளார் புதுவையைச் சேர்ந்த கிருத்திகா என்ற 24 வயது இளம் பெண். பரதத்தின் மீதும், திருக்குறளின் மீதும் கொண்ட பற்றினால் 133 மணி நேர தொடர் நாட்டியத்தை அரங்கேற்ற முனைந்துள்ளார் தமிழை தாய் மொழியாகக் கொண்ட அவர்.
இந்த தொடர் நடனத்தை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் நடனமாடியவர் என்ற கின்னாஸ் சாதனையை படைக்க உள்ளார் கிருத்திகா.
வரலாற்றில் பரதம்
பரதநாட்டியம் தமிழகத்தில் தோன்றியக் கலை என்பதால் இக்கலை தமிழர்களின் கலாச்சாரம், பண்பு மற்றும் வாழ்கை முறையென பல்வேறு தடங்களில் தமிழகத்தின் சிறப்பை உணர்த்தி வருகின்றது. அதற்கு சான்றாக சங்க கால நூல்களான சிலப்பதிகாரம் (அரங்கேற்றுக் காதை), தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்களில் பரதக்கலைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர்காரணம்
பரதநாட்டியத்தை "சதுராட்டம்" என்றும் கூறுவர். ஏனெனில் கோவில்களின் மைய்யப்பகுதியில் சதுரமான ஒரு இடத்திலோ அல்லது மேடையிலோ தேவிதாசிகளால் ஆடப்பட்டதால் அவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது. இதனை சதிராட்டம் எனவும் சங்கப் பாடல்களில் குறிபிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தேவிதாசிகளால் பரதம் ஆடப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் மக்களின் மனத்தைக் கவர்ந்த இக்கலை அனைத்து மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கலையின் சிறப்பு
காக்கும் கடவுளான தில்லை ஈஸ்வரன் இக்கலையின் தலைவனாக கருதப்படுகிறார். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தி ஆடப் படும் கலை என்பதால் நடனம் ஆடுபவர்களும், அதனை பார்த்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கும் மன நிம்மதி கிடைகின்றன எனக் கூறுகின்றது பரதம் குறித்த ஆய்வுகள். சிறப்பு பெற்ற ஐந்து வகை நாட்டியங்களில் ஒன்று பரதநாட்டியம் என்பதும் குறிபிடத்தக்கது.
கிருத்திகா

இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற பரதத்தில் தொடர்ச்சியாக 133 மணி நேரம் திருக்குறளுக்கு நடனமாடவுள்ள கிருத்திகா விவரித்தது.....
"சிறு வயது முதலே பரதநாட்டியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதனால் மூன்றாம் வகுப்பு முதல் பரதத்தை முறையாக கற்கத் துவங்கினேன். அதற்கு எனதுப் பெற்றோர்களும் உறுதுணையாக இருந்தனர். தினந்தோறும் பயிற்சி செய்ததன் மூலம் 13 வது வயதில் புதுவை மாநில அளவில் சிறந்த கலைக் குழந்தை விருதை பெற்றேன். அந்த விருதை பெற்றதன் மூலம் இந்திய அளவில் எனக்கு தனியொரு அங்கீகாரம் கிட்டியது. அதுமட்டுமல்லமால் அவ்விருது பரதக்கலையில் நான் அடுத்த நிலைக்குச் செல்ல எனக்கு ஊக்கமளித்தது. அதன் மூலம் இந்தியளவிலும், உலகளவிலும் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை அங்கேற்றினேன்.
பின்னர் Centre for Cultural Resources and Training (CCRT) உதவித்தொகையை பெற்றேன்.
கடந்த 15 ஆண்டுகளாக பரதக் கலையில் ஈடுபட்டு வருகிறேன். அதுமட்டுமல்லமால் தமிழ் மொழியின் புகழை உலகிற்கு எடுத்துரைக்கும் நூலான திருக்குறள் மீது தீராத ஆர்வம் கொண்டமையால், குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு பரதநாட்டியத்தை அரங்கேற்ற திட்டமிட்டேன். அதன் மூலம் உலகிலேயே அதிக நேரம் நடனமாடியவர் என்ற கின்னாஸ் சாதனையை படைக்க திட்டமிட்டேன்.
அதனடிப்படையில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் பரதநாட்டியத்திற்கு ஏற்றவாறு ஒலி வடிவில் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் இசையாக அமைத்தேன். அதற்காக ஒரு வருடம் செலவழித்துள்ளேன். 
கின்னஸ் சாதனை கமிட்டிக் குழுமத்திடமும் தொடர்ச்சியாக 133 மணி நேரம் பரதம் ஆடுவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளேன். அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஒய்வு என நிர்ணயித்துள்ளது கின்னஸ் சாதனைக் குழுமம். அதன் மூலம் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு உறங்காமல் நடனமாட உள்ளேன்.
கிருத்திகா

 வெகுவிரைவில் திருக்குறளுக்கு பரதம் ஆடுவதன் மூலம் உலகிலேயே நீண்ட நேரம் நடனமாடியவர் என்ற சாதனையை படைக்க உள்ளேன். அதன் மூலம் உலகளவில் தமிழ் மொழியின் புகழை நிலை நாடுவேன்" என்கிறார் அவர்.
 
 
கணினி அறிவியலில் முனைவர் பட்டமும், நடனத்தில் M.Phil லும் முடித்துள்ளார் கிருத்திகா என்பதும் குறிபிடத்தக்கது. "நிர்தய ஜோதி" மற்றும் "கலை இள நானமை" போன்றப் பட்டங்களை பெற்றுள்ளார் கிருத்திகா.

கின்னஸ் சாதனை கமிட்டிக் குழுமத்தினரிடமிருந்து அனுமதி பெற்றிருந்தாலும் அரங்கேற்றத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கிருத்திகா தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது கின்னஸ் சாதனை குழுமம். அதனால் தற்போது அரங்கேற்றத்திற்கு தேவைப்படும் 14 லட்ச ரூபாயை மக்களிடமிருந்து பெற திட்டமிட்டுள்ளார் அவர். திருக்குறளில் மராத்தான் நாட்டியம் ஆடவுள்ள கிருத்திகா கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துக்கள்......
Source, Photos & Videos : Krithiga Dancer Facebook Page & http://krithiga.weebly.com 

No comments:

Post a Comment