Tuesday, August 12, 2014

பனை - தமிழ் மரம்


உலகத்தில் முதலில் தோன்றியக் குடி தமிழ் குடி என்பர். வரலாற்று சிறப்புக் கொண்ட தமிழ் குடிக்கும், செம்மொழியான தமிழ் மொழிக்கும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு விதமாக பயன்பட்டு வருகின்றது பனை மரம். குறிப்பாக தமிழ் மொழியின் ஆரம்பக் கால ஊடகமாகவும் செயல்பட்டு வந்தது பனை ஓலைகள் தான். தமிழக அரசின் மரமும் பனை தான்.
வரலாற்றில் பனை மரமும் - பனை ஓலைகளும்
உலகிலேயே முதல்முறையாக தோன்றியத் தாவரம் பனை தான் என்கிறது வரலாறு. கடுமையான வறட்சியிலும் பனை தளராது வளரும் திறன் கொண்டது. அதுமட்டுமல்லாது பூலகத்தின் கற்பக விருட்சகம் என்பதாலும் நமது முன்னோர்கள் பனையை வளர்த்துள்ளனர்.
பனை மரம் தமிழகத்தின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுப்பட்டது என்பதற்கும் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துனையாய்
கொள்வார் பயன்தெரி வார்"
(தமக்கு ஒருவன் தினையளவு நன்மையைச் செய்தானாயினும், அதனால் விளையும் நன்மையை ஆராய்பவர்கள், அவ்வுதவியைப் பனையளவாகக் கருதுவர்)
இக்குறளின் மூலம் வள்ளுவர் பனையின் வளத்தையும், அதன் உயரத்தையும் குறிப்பிட்டுள்ளார். இயற்கையாகவே பனை மரங்கள் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவை. அதுமட்டுமல்லாது பனை மரம் வளர்ப்பது பழங்காலத்தில் ஒரு தொண்டாகவே கருதப்பட்டுள்ளது.

 
பனை ஓலைகள் எப்படி எழுதுவதற்கு பயன்பட்டது?
எழுத்தறிவு பெற்றவுடன் உலக மக்கள் பல்வேறு பொருட்களை எழுதுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கிடைக்கும் பனைமரத்தின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகவும், நெளியும் தன்மைக் கொண்டதாலும், விரைவில் சிதைந்து விடமால் நீண்ட நாட்களுக்கு பயன்படும் என்பதாலும், பனை ஓலையை எழுத்து பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.
 பனை மர ஓலைகளை நாறாகவோ அல்லது பட்டைகளாகவோ கிழித்து, அவற்றை தகுந்த அளவிற்கு வெட்டி, மூலிகை திரவங்களை பயன்படுத்தி பனை பட்டைகளை பதப்படுத்தி உள்ளனர். 
அப்படி பதப்படுத்திய பின்னர் அதனை வெயிலில் உலர்த்தி எழுத்து பணிகளை, எழுத்தாணிகளைக் கொண்டு எழுதியுள்ளனர் சங்கக் காலப் புலவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழர்களும் தனித்தனி ஏடுகளாக எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டதை ஏடுகளாக சேகரித்து நூலாக வடிவமைத்துள்ளனர்.
அதற்கு சான்றாக திருக்குறள் மற்றும் பழங்கால நூல்கள் சான்றாக உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தற்போது எப்படி நமது பயன்பாட்டுக்கு கிடைத்தன?
தொடக்கத்தில் பழம் பெரும் தமிழ் காப்பியங்களும், நூல்களும் வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்தன. எழுத்தாணியும், ஓலைச்சுவடிகளும் தோன்றிய பின்னரே அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைகள் அனைத்தையும் சேகரித்து, அதனை அச்சு வடிவில் நூல்களாக கொண்டுவந்தது தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர்.
 உ.வே. சுவாமிநாத அய்யர்
அவர் தனது வாழ்நாள் இறுதிவரை தொடர்ச்சியாக ஓலைகளை சேகரித்து, அதனை அச்சு வடிவில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் நூல்களாக மாற்றியதோடு, 3000 க்கும் மேற்பட்ட ஏடுகளையும் சேகரித்துள்ளார் உ.வே. சாமிநாத அய்யர்.
அவர் மட்டுமல்லாது தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஓலைச் சுவடிகளை சேகரித்து அதனை அச்சில் ஏற்றியுள்ளனர்.
மேலும் சென்னையிலுள்ள கீழ்த்திசை நூலகத்தில் பல நூற்றான்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்தும், அவற்றை புதுபித்தும் வருகிறது.
பனையின் பிறப் பயன்கள்
பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்களும், உணவுகளும் கிடைக்கின்றன.
பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள்
கூடை, பெட்டி, பாய், ஓலை, விசிறி முதலியவையும் கிடைக்கின்றன. மேலும் பனங் கருக்கு, பாளை, பனங் கிழங்கு, பனை மட்டை, பனை ஓலை முதலியவையும் பனை மரத்தின் உறுப்புகளிலிருந்து கிடைக்கின்றன.
 
பனையிலிருந்து கிடைக்கும் உணவுகள்
பதநீர், கள், கருப்பட்டி, பனை வெள்ளம் முதலிய உணவுகள் கிடைக்கின்றன. இந்த உணவுகள் அனைத்தும் கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து, வைட்டமின், நார்ச்சத்து முதலிய மருத்துவை குணங்கள் அடங்கியவை.
பெரும்பாலும் பனை மரங்கள் ஆசிய நாடுகளில் மட்டுமே வளரக் கூடியவை.

பனையும் - பனை  சார்ந்தத் தொழிலும்
பனையினை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பனை மரம் ஏறுதல், கள் மற்றும் பதநீர் இருக்குதல், கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் தயாரித்தல் போன்றப் பணிகளை பனைத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலும் இரண்டு மாத கால தொழிலாகவே இத்தொழில் விளங்குகின்றது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கூட தமிழர் திருநாளன பொங்கலன்று கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் போன்றவற்றை பயன்படுத்தியே பொங்கல் செய்து, சூரியனுக்கு படையிளிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பனையின் நிலை
விளைநிலங்கள் அனைத்தும் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறி வருவதாலும், மறுபுறம் நெடுஞ்சாலைகள் சீரமைப்புக்காகவும் தமிழ் மரமான பனை மரம் அழிக்கப்பட்டு வருகின்றது.
அதே சமயத்தில் "பசுமைத் தூய்மை அமைப்பு" சார்பில் பனை மரங்களை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மக்களிடையே ஏற்படுத்துப்பட்டு வருகின்றன.
இருப்பினும் தமிழக அரசு தமிழ் பாரம்பரியமிக்க பனை மரத்த பாதுகாக்க முன்வர வேண்டும்.....

No comments:

Post a Comment