தமிழ் வீடுகளின் வாசல்களில் செடிகளே இல்லாமல் பூக்கும் பூவாக கோலங்கள் தினந்தோறும் பூக்கின்றன. பழங்காலம் முதல் இது நாள் வரை தமிழர்களின் பண்பாடோடு தொடர்ந்து வருகின்றது கோலக்கலை. கோலம் என்பது அழகினை குறிக்கின்றது. கோலக்கலையை சித்ரக்கலா எனவும் குறிப்பிடுவர்....
வரலாறு
தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னதாகவே கோலமிடும் பழக்கம் இருந்தமையாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். துவக்கத்தில் கோலங்கள் கோடுகளாக தரையில் வரையப்பட்டுள்ளன. காலப்போக்கில் கோலம் வரைவதற்கு கைகள் பழக்கமான பின்னர் பல்வேறு வடிவங்கள் அடங்கிய கோலங்கள் தீட்டப்பட்டன.
அரசர்கள் போரில் வெற்றி பெற்று நாடு திரும்புகின்ற நேரங்களில் ஆரத்தி எடுத்து, அந்நீரை வாசலில் உள்ள கோலத்திற்கு கொண்டுச் சென்று கொட்டும் பழக்கம் இருந்துள்ளது.
அதே போல் மகாபாரதம், இராமாயாணம் போன்ற இதிகாச நூல்களில் கோலங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல் வாசலில் கோலமிடுவது தமிழரது மரபாக கடைபிடிக்கப்பட்டது.
கோலம் இடுவதன் நன்மைகள்
வாசலில் பசுவின் சாண நீரைத் தெளித்து, அரிசி மாவினால் ஆரம்பக் காலங்களில் கோலங்களை தீட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். அதன் மூலம் மண்ணில் ஊரும் உயிரினங்களுக்கு கோலமாவு உணவாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் அரிசி மாவினை பயன்படுத்தி கோலங்களை தீட்டியுள்ளனர்.
பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வாசலை சுத்தம் செய்து கோலமிடுவது அருமையான உடற்பயிற்சி என்கின்றனர் மருத்துவர்கள். நீண்ட நேரம் குனிந்தும், நிமிர்ந்தும், விரல்களை பயன்படுத்தியும் கோலம் தீட்டுவது எலும்புகளுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
அதுமட்டுமல்லாமல் கிருமிநாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதன் மூலம் வீடுகளுக்குள் கிருமிகளும், பூச்சிகளும் அதிகம் அண்டாது எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிகாலைப் பொழுதில் காற்று தூய்மையாக இருப்பதாலும், குளிர்ந்தக் காற்று வீசுவதாலும், சூரியன் உதிப்பதற்கு முன்பே கோலமிடுவது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்பதால் நமது முன்னோர்கள் பெண்களின் கடமையாக இதனை கடைபிடித்துள்ளனர்.
மேலும் கோலங்கள் வெண்ணிற மாவினால் வரையப் படுவதனால் அதனை பார்க்கும் பொழுது மன நிம்மதியும், ஒழுக்கமும் வீடுகளில் மேலோங்கும்.
கோலத்தின் வகைகள்
தமிழர்களது பண்பாட்டில் ஒன்றான கோலம் பல்வேறு வகையாக வரையப்படுகின்றன. மாக்கோலம் (அரிசி மாவு), புள்ளிக் கோலம், இழைக் கோலம், சிக்கு கோலம், அங்கக் கோலம், ரங்கோலி, மணற் கோலம், வெள்ளைக்கல் மாவுக் கோலம், பூக் கோலம், பயறு கோலம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாக காட்டுவதற்கு காவி நிறத்தையும் பயன்படுத்துவர். மேலும் வண்ண நிறங்களை பயன்படுத்தியும் கோலங்கள் வரையப் படுகின்றன. மார்கழி மாதங்களில் வண்ணக் கோலங்களின் மத்தியில் சாண உருண்டை பிடிக்கப்பட்டு, அதன் மேல் பரங்கி பூவை வைத்து அலங்கரிப்பதும் தமிழர்களின் வழக்கம்.
பிற மாநிலங்களில் கோலங்கள்
தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மஹா ராஷ்டிரா, ராஜஸ்தான், போன்ற மாநிலங்களிலும் கோலங்கள் தீட்டப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கோலத்தின் நிலை?
தற்போதும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பெண்கள் கோலங்களை தீட்டி வருகின்றன. கடந்த 30 - 40 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தற்போது கோலங்கள் தீட்டப்படுவது 10 சதவிகிதம் குறைந்துள்ளது.
பெரும்பாலும் விழாக் காலங்களிலும், மார்கழி மாதம் மற்றும் கோலப் போட்டிகளில் மட்டுமே வண்ணப் பொடிகளை பயன்படுத்தி பெரிய அளவில் கோலங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் நட்சத்திர வடிவிலும், புள்ளி கோலங்கள் மட்டுமே இடப்பட்டு வருகின்றன.
கோலங்கள் தற்போதும் தமிழக வீடுகளின் வாசலில் தீட்டப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment