Sunday, August 31, 2014

காட்சி ஊடகங்களில் தமிழ் மொழியின் எழுச்சி


தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களில் பெரும்பாலும் கமர்சியல் நோக்கத்திலேயே செயல்படுகின்றன. சினிமா, விவாதம், செய்திகள், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை அடிப்படையாகக கொண்டு மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
இவற்றிற்கு விதிவிலக்காக தமிழ் மொழியின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகின்றன.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக ஒளிப்பரப்படும் நிகழ்ச்சிகளை குறித்து இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

 
ஒரு வார்த்தை ஒரு லட்சம்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு ஒரு வாரத்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி ஒளிப்பரப்படுகின்றது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தமிழ் சொற்களை மையமாக கொண்டு விளையாடப்படும் விளையாட்டு தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். இரு நபர்கள் கொண்ட அணிகளாக இவ்விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது. எதிரெதிராக ஒரே அணியைச் சேர்ந்த நபர்கள் போட்டிக் களத்தில் நிற்க வேண்டும். அதில் ஒரு நபருக்கு மட்டும் ஒரு சொல் மானிட்டர் மூலம் ஒளிப்பரப்படும். அச்சொல்லுக்கு இணையான அர்த்தமாகவோ அல்லது எதிராகவோ உள்ள ஒரு சொல்லை எதிரே உள்ள நபருக்கு கூற வேண்டும். அத்கபட்சமாக ஒரு சொல்லுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்களுக்கென்று ஒரு வார்த்தை ஒரு சொல் சீனியர் தொகுப்பும், பள்ளி மாணவர்களுக்காக ஒரு வார்த்தை ஒரு சொல் ஜூனியர்  நிகழ்ச்சியும் ஒளிப்பரப்படுகின்றது.
 

 
மொழி அறிவோம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு ஒளிபரப்படும் புதிய விடியல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மொழி அறிவோம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மொழியை தவறின்றி தெளிவாக பேசுவதற்கும், எழுதுவற்கும் எளிய முறையில் கற்றுத் தருகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர் நிரஞ்சன் பாரதி. அதுமட்டுமல்லாது தமிழ் மொழியின் அருமைகள், பழமொழிகளின் பயன்பாடு, இலக்கணம், வரலாறு, பண்பாடு ஆகியவகைக் குறித்தும் விளக்கமாக விவரிக்கிறார் தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 
 
தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு
பேச்சாற்றலுக்கு புகழ் பெற்ற தமிழகத்தில் "தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. இது ஒரு தமிழ் மொழிப் பேச்சுபோட்டி நிகழ்ச்சியாகும். ஸ்டார் விஜய் தொலைக்காட்சி குழுமத்தின் தமிழ் மொழி வளர்ச்சி முனைப்பில் மற்றுமொரு முயற்சியாகும்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் தான் இதன் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் ஆகியவற்றை பிழையின்றி பேசுபவர்களை அடையாளம் காண்பது தான் இதன் நோக்கம். பல்வேறு சுடுறுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் அசத்தலாக பேசும் போட்டியாளரை நடுவர்களாக அமர்ந்துள்ள தமிழ் அறிஞர்கள் தெரிவு செய்கின்றனர். அதில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு கொடுத்து பாராட்டுகின்றது விஜய் குழுமம். கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்படும் இந்நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் பலத்த வரவேற்பு அளித்து, அங்கீகரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 
நொடிக்கு நொடி அதிரடி
மக்கள் தொலைக்காட்சியில் வார நாட்களில் தினந்தோறும் இரவு 9.02 மணிக்கு நொடிக்கு நொடி அதிரடி நிகழ்ச்சி ஒளிப்பரப்பகின்றது. இதனை சித்திரா என்பவர் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சொற்களுக்கான அர்த்ததத்தையும், மறைந்துள்ள எழுத்துகளில் இருந்து தமிழ் சொற்களை அறிந்துக் கூற வேண்டும். இது ஒரு தமிழ் மொழி விளையாட்டுப் போட்டி. நேரலையாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைபேசி வாயுளாக போட்டியாளர்கள் பங்குபெறுவர்.  இதில் வெற்றி பெற போட்டியாளர்கள் இரண்டு சுற்றுகளில் பங்குபெற்று வெற்றிப்பெற வேண்டும். குறிப்பை பார்த்து விடை சொல்லுதல் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள சொற்களை பொருத்துதல் ஆகிய பிரிவுகளாக போட்டி நடத்தப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை காண்பதன் மூலம் எளிய முறையில் அரிதான தமிழ் சொற்களின் அர்த்தங்களை அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் தமிழ் பேசு தங்கக் காசு, தமிழ்ப்பண்ணை, களத்துமேடு, வில்லும் சொல்லும், தமிழ் கூடல், பண் பாடல்கள் போன்ற நிகழ்சிகள் வாயுலாகவும் தமிழை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றது மக்கள் தொலைகாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல காட்சி ஊடகங்களின் மூலம் தமிழ் மொழியின் புகழை பரப்பும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
வளர்க தமிழ்....


Saturday, August 30, 2014

ஆன்ட்ராய்டில் தமிழ் மொழி


உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன.
குறிப்பாக தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையிலான செயலிகளும் ஆன்ட்ராய்ட் செயலிகள் உருவிலுள்ளன. அதனை தமிழ் மொழி மீது பற்றுகொண்ட ஆர்வலர்களும், நிறுவனங்களும் வடிவமைத்து தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இக்கட்டுரையின் மூலம் தமிழ் மொழிக்கு பயனளிக்கும் குறிப்பிட்டச் சில செயலிகளை குறித்துக் காண்போம்...
ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் எழுதவும், படிக்கவும்
ஆன்ட்ராய்ட் செயலிகள் மூலம் ஸ்மார்ட் போன்களில் தமிழை எழுதவும், படிக்கவும் இயலும்.

Tamil Unicode Keyboard (https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&hl=en)ஆன்ட்ராய்ட் செயலியின் மூலம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சுச் (Type) செய்து Cnv எனப்படும் Convert பொத்தானை அழுத்துவதின் மூலம் அச்சொல்லை தமிழ் எழுத்தாக மாற்றாலாம். இது Phonetics (பனடிக்ஸ்) அடிப்படையில் செயல்படுகின்றது. உதாரணமாக AMMAA என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து CNV பொத்தானை அழுத்துவதன் மூலம் அம்மா என மாறிவிடும்.
அதே போல் Opera mini ஆன்ட்ராய்ட் செயலியை  பயன்படுத்தி தமிழ் மொழியை படிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் எழுதிய செய்யுள்கள், பாடல்கள், புதினங்கள் மற்றும் நூல்கள் முதலியவற்றையும் ஆன்ட்ராய்ட்  செயலிகளின் மூலம் படிக்கலாம்.


 
திருக்குறள்
வள்ளுவரால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளை ஆன்ட்ராய்ட் போன்களில் படிக்க Thirukkural E-Book - Tamil (https://play.google.com/store/apps/details?id=shasunder.tirukural.ebook) என்ற செயலியை ஸ்மார்ட் போன்களில் நிறுவிக் கொள்வதன் மூலம் திருக்குறளை படித்து பயன் பெறலாம். இணைய இணைப்பின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள்.
அவ்வை நூல்கள்
சங்கக்கால பெண்பால் புலவரான அவ்வையார் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை மற்றும் நல்வழி போன்ற நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Avvai Noolgal (https://play.google.com/store/apps/details?id=com.avvai.nools&hl=en) செயலி உதவுகின்றது. குறப்பாக அச்செயலியில் "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையும் இணைய வசதியின்றி பயன்படுத்தலாம்.

கம்ப இராமாயணம்
இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த இதிகாச நூலான இராமாயணத்தை கம்பர் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தார். அந்நூலை இன்றுவரை தமிழகத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் வாசித்து வருகின்றனர். அப்படிப்பட்ட புகழ் கொண்ட கம்ப இராமாயணத்தை ஆன்ட்ராய்ட் செயலியில் படிக்க உதவுகின்றது Kamba Ramayanam in Tamil (https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.ramayanam) செயலி.
பாரதியார் படைப்புகள்
மகாகவி பாரதி அவர்கள் எழுதிய நூல்களாக பகவத் கீதை, சந்திரகையின் கதை, தேசிய கீதங்கள், ஞானப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை மற்றும் பாரதியாரின் சுயசரிதை உட்பட பாரதியின் தமிழ் பணிகள் அனைத்தையும் படிக்க உதவுகின்றது Mahakavi Bharathiyar Full Work (https://play.google.com/store/apps/details?id=com.varnaa.studio&hl=en) செயலி.

பாரதிதாசன் நூல்கள்
புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன் அவர்கள் செய்யுள் மற்றும் கவிதைகள் அனைத்தும் எளிய நடையில் கதை போல் விவரிக்கப்பட்டிருக்கும். அவர் எழுதிய நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Bharathidasan tamil Poems (https://play.google.com/store/search?q=BHARATHIDASAN%20KAVITHAIGAL%20FULL%20WORK&c=apps&hl=en) என்ற செயலி உதவுகின்றது.
 
மேற்கூறிய தமிழ் நூல்கள் மட்டுமின்றி மேலும் பல தமிழ் நூல்கள், புதினங்கள், அறிஞர்களின் சுயசரிதைகள் உளிட்டவையும் ஆன்ட்ராய்ட் செயலி வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தவும், அதன் விவரங்களை அறியவும் Tamil Android (https://www.facebook.com/tamilandroid) என்ற முகநூல் பக்கத்தை பார்க்கவும்.

தமிழ் யோசி
இந்த ஆன்ட்ராய்ட் செயலியின் (https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&hl=en) மூலம் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களை ஸ்மார்ட் போன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது கல்வி அறிவையும் இந்த செயலியின் மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் அகராதி
ஆங்கிலம் மற்றும் தமிழியில் இயங்ககூடிய வகையிலான அகராதியை ஆன்ட்ராய்ட் செயலியில் கிடைக்கின்றன. Tamil Dictionary (https://play.google.com/store/apps/details?id=com.dictionary.ta&hl=en) என்ற செயலியின் மூலம் இணைய வசதியின்றி அகராதியை பயன்படுத்தி அர்த்தங்களை தெரிந்துக் கொள்ளலாம்.




சங்கப்பலகை
ஸ்மார்ட் போன்களின் மற்றொரு இயங்கு தளமாகிய ஆப்பிள் செயலியில் சங்கப்பலகை செயலி (https://itunes.apple.com/us/app/sangapalagai/id591043265?mt=8) இயங்குகின்றது. அதன் மூலம் தமிழ் படைப்புகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ளலாம்.
 
www.openreadingroom.com என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தமிழ் நூல்களை இணையம் மூலம் அறியலாம். நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் செயலிகளின் மூலம் தமிழ் நூல்கள் அனைத்தும் நமது கைகளினுள் இருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

Tuesday, August 26, 2014

சுமை தாங்கிக் கல்


தமிழகத்திலும், தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகளிலும் தமிழர்களின் பழமையான நினைவுகளை சுமை தாங்கிக் கற்கள் இன்றும் நினைவுக் கூறுகின்றன.
வரலாறு
அக்காலத்தில் மக்கள் கால் நடையாகவே பயணங்களை மேற்கொண்டு வாழ்ந்துள்ளனர். அதுமட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சுமந்துக் கொண்டே நடைப் பயணத்தை மர்கொண்டுள்ளனர். அந்நேரங்களில் அவர்கள் சுமந்து செல்லும் சுமைகள் மற்றும் பொருட்களை ஓரிடத்தில் இறக்கி வைப்பதற்காகவே சுமித் தாங்கிக் கற்களை நிறுவியுள்ளனர் நமது முன்னோர்கள்.
மேலும் அக்காலத்தில் தனியொரு நபராகவே சுமைகளை சுமந்து செல்வர். அவர்கள் செல்லும் வழியில் இளைப்பாறுவதர்காகவே சுமைத் தாங்கிக் கற்களை அமைத்துள்ளனர்.
சுமை தாங்கிக் கற்களின் வடிவமைப்பு
சராசரியாக 6 முதல் 8 அடி உயரம் வரை உள்ளவாறு சுமை தாங்கிக் கற்களை நிறுவியுள்ளனர். பெரும்பாலும் கற்களால் சுமித் தாங்கிகளை உருவாக்கியுள்ளனர்.
இரண்டு தூண்களை செங்குத்தாக நிருத்தியாவாறு பூமியினுள் புதைத்து. அதன் மேல் ஒரு கல்லை அந்த இரண்டு தூண்களுக்கும் சமமாக இருக்கும் வகையில் மட்டமாக பொருத்தியுள்ளனர்.
ஒரு சில இடங்களில் சுண்ணாம்புக் கலவயிலாளான சுமித் தாங்கிக் கற்களையும் காண முடிகின்றது.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுபவர்களை, மற்றவர்கள் கைகளில் சுமந்தபடி மருத்துவரிடம் செல்ல கள்ளன்டையாக நெடுந்தூரம் பயணித்துள்ளனர். குறிப்பாக பேறு கால நேரங்களில் பெண்களை கைகளில் சுமந்துக் கொண்டு தான் பயணம் செய்துள்ளனர்.
அதன் கடினமான சூழலில் மாண்டு போன் பெண்களின் நினைவாகவும் சுமித் தாங்கிக் கற்கள் நிறுவும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர் தமிழர்கள்.
தமிழகத்தில் சுமை தாங்கிக் கற்களின் தற்போதைய நிலை?
வாகனப் போக்குவரத்து பெருகி விட்டதாலும், சாலைகளை அகலபடுத்தும் பணிகள் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காரணத்தினாலும் சுமித் தாங்கிக் கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் நவீன யுகத்தின் வளர்ச்சியினாலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சுமை தாங்கி கற்கள் பயன் அற்றதாக மாறிவிட்டன.
தமிழ் மக்களின் அடியாலமாகத் திகழும் சுமை தாங்கிக் கற்களை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும்......

Monday, August 25, 2014

ஒளவையின் உருவத்தை வரைந்துள்ளார் புதுவையைச் சேர்ந்த ஓவியப் பேராசிரியர்

 
சங்கக் காலத்தில் வாழ்ந்த பெண்பாற் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். வள்ளுவரும், ஒளவையாரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியன் மற்றும் அதியமான் போன்ற மன்னர்களிடத்தில் பாடல்கள் பாடியுள்ளார் ஒளவையார். அகம், புறம், நற்றினை, குறுந்தொகை, மூதுரை, ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை ஒளவை எழுதியுள்ளார்.
நல்லக் குரல் வளம் உள்ளதால் மன்னர்களை புகழ்ந்து பாடலும் பாடுவார் ஒளவை. புராணக் கால் கதைகளில் ஒளவை தமிழ் கடவுளான முருகப் பெருமானை குளிர்விப்பதற்காக பழந்தமிழில் பாடல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வள்ளுவர் போன்ற பழம் பெரும் புலவர்கள் இப்படி தான் தோற்றம் அளித்திருந்தனர் என்பதை படங்கள் மற்றும் சித்திரங்களின் மூலம் நாம் அறிந்துக் கொள்கின்றோம்.
அதே சமயத்தில் பெண்பாற் புலவராகிய ஒளவையின் தோற்றத்தை விவரிப்பதற்கு எந்தவொரு சித்திரமும், படமும் ஆதாரமாக இல்லை.
தமிழ்த் திரைப்படங்களில் ஒளவையார் கோல் ஊன்றிய படி, நெற்றியில் பூசை போட்டுக் கொண்டு தெய்வங்களை புகழ்ந்து பாடுபவராக இயக்குனர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் உண்மையில் ஒளவை இப்படித்தான் இருந்திருப்பாரா என்ற எண்ணம் நம்முள் எழுந்திருக்கும். அதற்கு தீர்வு காணும் விதமாக புதுவை பாரதியார் பலகலைக் கூட ஓவியப் பேராசிரியரான ராசராசன் அவர்கள் ஒளவையாரின் உருவத்தை சித்திரமாக வரைந்துள்ளார்.
ராசராசன்
 
திரைப்படங்களின் மூலம் நமது மனதில் பதிந்த ஒளவையின் உருவம் போல அல்லாமால். வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் நூல்கள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் முதலியவற்றை ஆய்வு செய்து ஓலைவையான் இப்படிதான் தோற்றம் அளித்திருப்பார் என்ற எண்ணத்திற்குள் மூழ்கி, தனது அகக் கண்ணில் தெரிந்த ஒளவையின் உருவத்தை அழகிய சித்திரமாக வரைந்துள்ளார் ராசராசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் ஒளவையும், வள்ளுவரும் சமகாலத்தில் வாழ்ந்தப் புலவர்கள் என்பதையும் அந்த ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தியுளர் அவர். குறிப்பாக
"அறம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
 மக்கட்பண்பு இல்லா தவர்
"
என வள்ளுவரும், அதற்கு ஒளவை
"கற்றது கைமண் அளவு
கல்லாதது உலகளவு
"
எனக் கூறுவது போன்றும் ஓவியத்தை வரைந்துள்ளார்.
இந்த உரையாடல் ஒரு மரத்தின் கீழுள்ள திண்ணையில் வள்ளுவரும், ஒளவையும் அமர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்ந்த நிகழ்வாக தந்து ஓவியத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார் ஓவியர் ராசராசன்.
தமிழ் புலவர்களைக் குறித்து உலக மக்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பிய புதுவையைச் சேர்ந்த அன்னை அச்சகத்தின் உரிமையாளர் கோவிந்தசாமி. அவரது முயற்சியினாலும், ஊக்கத்தினாலும் இந்த ஓவியத்தை ராசராசன் அவர்கள் வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் வரைந்த ஓவியத்தை 2013 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியாக உருவாக்கியுள்ளது அன்னை அச்சகம்.
அந்த நாள்காட்டியை புதுவை மக்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் இலவசமாக அளித்துள்ளனர் அவர்கள் இருவரும்.
2014 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியையும் இதே பாணியில் வள்ளுவரை வரைந்து மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளனர். இதே போன்று தமிழ் மொழி மீது பல ஆயிரம் மக்கள் தமிழ் மீது பற்று வைத்துள்ளனர். அதன் மூலம் செம்மொழியாகிய உலக மொழி என்றும் வளர்ந்துக் கொண்டே இருக்கும்.........

Wednesday, August 20, 2014

உலக மொழிகளில் திருக்குறள்





 
உலகப் பொதுமறையான திருக்குறள் உலகளவில் பேசப்பட்டு வரும் பல்வேறு விதமான மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் அவர்களது தாய்மொழியில் திருக்குறளை மொழிப் பெயர்த்துள்ளனர். தற்போதும் திருக்குறளை பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்து வருகின்றனர்.

அதற்காக தமிழக அரசும் உதவி வருகின்றது. வாழ்வியல் நூலாகப் போற்றப்படும் திருக்குறள் மனிதர்களுக்கு தேவையான பண்புகளை எடுத்துரைக்கின்றன. சுமார் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நூல் வள்ளுவரால் எழுதப்பட்டது.

மனிதர்களின் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தும் இந்நூலில் அடங்கியுள்ளதால் ஆங்கிலம், செக், டச்சு, பின்னிச், பிரெஞ்சு, ஜெர்மன், ஹங்கேரியன், இத்தாலி, லத்தின், பாலிஷ், ரஷ்ஷியன், ஸ்பேனிஷ், ஸ்வேடிஷ் (Swedish), கிரேக்கம், போர்ச்சுகீஸ் ஆகிய உலக மொழிகளிலும், கொரியன், ஜப்பானீஷ், சீனம், அரபி, பர்மீஸ், மலாய், சிங்களம், உருது ஆகிய ஆசிய மொழிகளிலும், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கொக்காணி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிருதம், சவ்ராஷ்ட்ரம், தெலுங்கு, வாக்ரிபோலி, சந்தால் முதலிய இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய மொழிகளோடு சேர்த்து இதுவரை சுமார் 80 க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கணினி யுகத்தில் - திருக்குறள்

கணினி யுகமான 21 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு, ஹிந்தி, கன்னடம், ரஷியம், மலையாளம், ஆங்கிலம், அரேபி, கொங்கனி, மராத்தி, லத்தின், சமஸ்கிருதம், சிங்களம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள திருக்குறள் நூல்கள் அனைத்தும் இணையத்தின் மூலம் இலவசமாக படிக்கலாம்.
 

அதுமட்டுமல்லாது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனை பயன்படுத்தியும் திருக்குறளை இலவசமாகப் படித்துப் பயன் பெறலாம். தற்போது Softcraft எனப்படும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை வடிவமைக்கும் நிறுவனம் திருக்குறளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியுடன் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய அப்ளிகேஷனை மு., கலைஞர் கருணாநிதி, சாலமான் பாப்பையா மற்றும் ஜி.யு. போப் ஆகியவர்கள் எழுதிய திருக்குறளுக்கான அர்த்தத்தின் அடிப்படையாகக் கொண்டு பொருளும் அளிக்கின்றது.
 

சீன மொழியில் திருக்குறள்

தைவானில் வசிக்கும் யுஹிசி என்ற கவிஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்து திருக்குறளை தற்போது சீன மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழக அரசின் முயற்சியினால் சீன மொழியில் திருக்குறள் வெளிவர உள்ளது. அதற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலையின் முனிவர்களும், தமிழ் அறிஞர்களும் உதவி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட திருக்குறள் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒளி மற்றும் ஒலி வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாரெங்கும் பரவட்டும் திருக்குறளின் புகழ்....

 

Wednesday, August 13, 2014

தப்பு (பறை மேளம்) - தமிழிசை


தமிழர்களின் ஆதி கலை வடிவம் தான் பறை மேளம். இதனை தப்பு என்றும் மக்கள் அழைப்பர். தப்புதல் என்பதற்கு அடித்தல் எனவும் தமிழில் பொருளுள்ளது. கற்காலம் துவங்கி இன்று வரையில் தமிழர்களின் வாழ்வோடு இணைந்து பயணித்து வருகின்ற இசைக்கருவி பறை மேளம்.
திருவிழாக்கள், மங்கல மற்றும் அமங்கல விஷயங்கள் என அனைத்திலும் ஓங்கி ஒலிக்கின்ற இசை தான் பறை மேளம்.
மொத்தத்தில் பறை தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவி என்பதால் இது தமிழிசை.
வரலாறு
பல நூற்றாண்டுகளாக பறை இசை தமிழகத்தில் ஒலித்து வருகின்றது. இதற்கு சான்றாக திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், நிகண்டு, தேவாரம், புறநானூறு, நன்னூல், தொல்காப்பியம், திருப்புகழ் முதலிய சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
என்றக் குறளின் மூலம் பறையை சுட்டிக்காட்டியுள்ளார் வள்ளுவர்.
அதுமட்டுமல்லாது பண்டையத் தமிழர்களின் நிலவியல் பகுதிகளுக்கு ஏற்றவாறு வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமாக பறை வாசிக்கப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் இன்று வரை மக்களுக்கு தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வருகின்றது பறை இசை. மக்களுக்கு அரசர் தெரிவிக்க விரும்பும் செய்திகளையும், போரில் வெற்றி பெற்றதை அறிவிப்பதற்காகவும், விவசாயத் தொழில்களிலும், கூத்துகளிலும், வழிபாடு, விழாக்கள் மற்றும் துக்க வீடுகளிலும் பறை இசைக்கப்பட்டுள்ளது.
கட்டபொம்மனும், பாண்டிய மன்னனும் பறை இசையை கேட்டு ரசித்துள்ளனர் என்கிறது ஆய்வுகள்.

பறை மேளத்தின் வடிவமைப்பு மற்றும் வாசிக்கும் முறை
மரத்திலான வட்ட வடிவ சட்டத்தில், உயிர் நீத்த விலங்கின் (மாடு) தோளினை பதப்படுத்தி, பக்குவத்திற்கு வந்த பின்னர் அதனை பசை மூலம் மாற சட்டத்தோடு ஒட்டி தப்பினை உருவாக்கியுள்ளனர் ஆதி தமிழர்கள்.
இரு குச்சிகளைக் கொண்டு பறை மேளம் வாசிக்கப்பட்டு வருகின்றது. தங்கள் என்னத்திற்கு ஏற்றார் போல் குச்சிகளை வேகமாகவும், நிதானமாகவும் வாசித்து பறையிலிருந்து ஒலியை எழுப்புவர்.
கர்நாடக சங்கீதம் போன்று தமிழிசையான பறைகென்று ராக தாளங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதனால் பெருமுபாலும் சொற்றடர்களை அடிப்படையாகக கொண்டே பறை இசைக்கப்பட்டு வருகின்றது. இவையனைத்தும் நமது அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து உருவானவை.
தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டு என பல்வேறு ரகங்கள் பறையிசையில் உண்டு.
சமயத்தில் பறை இசைப்பவர்கள் மேளத்தின் மெட்டுக்கு ஏற்றவாறு நடனமும் ஆடுவர். அதனை பறையாட்டம் எனவும் அழைப்பர்.
தற்போது இரும்பு சட்டத்தைக் கொண்டும், பைபர் வடிவிலான இழைகளை கொண்டும் பறை மேளம் தயாரிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பறை இசையை கேட்கும் பொழுது மக்கள் மனதில் ஆனந்தமும், துள்ளலும் எழுகின்றது என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். அதனால் நான் தான் பறை இசையைக் கேட்டவுடன் நடனமாடுவதாகவும் கூறுகிறார்கள்.
பறையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் கிராமியக் கலைகளும் தோன்றியுள்ளன.
தமிழகத்தில் தற்போது பறையிசையின் நிலை?
பல்வேறு இசைக்கருவிகளின் வளர்ச்சியினால் பறை மேளங்களை முக்கிய விழாக்களில் வாசிப்பது குறைந்து வருகின்றது. இருப்பினும் தமிழரின் பாரம்பரிய இசை வடிவமாக கருதப்படும் பறை இசையை பல்வேறு தமிழர்கள் வளர்த்து வருகின்றனர்.

சாதி மத பேதமின்றி அனைத்து சாதியினரும் பறை இசையை கற்க முன்வர வேண்டுமென்ற நோக்கத்தில் சென்னை அருகே புத்தர் கலைக் குழுவை நிறுவி அதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயிற்சி அளித்து வருகிறார் மணிமாறன் என்ற தமிழர். பறையின் மீதுக் கொண்ட ஆர்வத்தினால் பறையிசையின் குறிப்புகளை சேகரித்து அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறார் அவர்.
அதேபோல் புதுவை அருகே உள்ள தமிழகப் பகுதியான சின்னக் கோட்டக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தமிழரசன், ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக தப்பு வாசித்து, அதில் கிடைக்கும் வருவாயின் மூலம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, பள்ளிப் படிப்பையும் தொடர்ந்து வருகிறார். எதிர்காலத்தில் பாரம்பரிய வாத்தியமான தப்பினைக் கொண்டு இசையுலகில் சாதிக்க விரும்புகிறார் அவர்.
                                                                         தமிழரசன்

உலகளவிலும் பறையின் புகழை பரப்ப முயற்சித்து வருகின்றனர் வெளிநாடு வாழ் தமிழர்கள்.
இவர்களைப் போன்றே ஒவ்வொரு தமிழரும் பாரம்பரிய இசைக் கருவியான பறையை போற்றி, அதன் வளர்ச்சிக்கு உதவ முன்வர வேண்டும்......


 

Tuesday, August 12, 2014

பனை - தமிழ் மரம்


உலகத்தில் முதலில் தோன்றியக் குடி தமிழ் குடி என்பர். வரலாற்று சிறப்புக் கொண்ட தமிழ் குடிக்கும், செம்மொழியான தமிழ் மொழிக்கும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு விதமாக பயன்பட்டு வருகின்றது பனை மரம். குறிப்பாக தமிழ் மொழியின் ஆரம்பக் கால ஊடகமாகவும் செயல்பட்டு வந்தது பனை ஓலைகள் தான். தமிழக அரசின் மரமும் பனை தான்.
வரலாற்றில் பனை மரமும் - பனை ஓலைகளும்
உலகிலேயே முதல்முறையாக தோன்றியத் தாவரம் பனை தான் என்கிறது வரலாறு. கடுமையான வறட்சியிலும் பனை தளராது வளரும் திறன் கொண்டது. அதுமட்டுமல்லாது பூலகத்தின் கற்பக விருட்சகம் என்பதாலும் நமது முன்னோர்கள் பனையை வளர்த்துள்ளனர்.
பனை மரம் தமிழகத்தின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுப்பட்டது என்பதற்கும் சான்றாக சங்க கால நூல்களான தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துனையாய்
கொள்வார் பயன்தெரி வார்"
(தமக்கு ஒருவன் தினையளவு நன்மையைச் செய்தானாயினும், அதனால் விளையும் நன்மையை ஆராய்பவர்கள், அவ்வுதவியைப் பனையளவாகக் கருதுவர்)
இக்குறளின் மூலம் வள்ளுவர் பனையின் வளத்தையும், அதன் உயரத்தையும் குறிப்பிட்டுள்ளார். இயற்கையாகவே பனை மரங்கள் 30 அடி உயரம் வரை வளரக் கூடியவை. அதுமட்டுமல்லாது பனை மரம் வளர்ப்பது பழங்காலத்தில் ஒரு தொண்டாகவே கருதப்பட்டுள்ளது.

 
பனை ஓலைகள் எப்படி எழுதுவதற்கு பயன்பட்டது?
எழுத்தறிவு பெற்றவுடன் உலக மக்கள் பல்வேறு பொருட்களை எழுதுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கிடைக்கும் பனைமரத்தின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகவும், நெளியும் தன்மைக் கொண்டதாலும், விரைவில் சிதைந்து விடமால் நீண்ட நாட்களுக்கு பயன்படும் என்பதாலும், பனை ஓலையை எழுத்து பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள்.
 பனை மர ஓலைகளை நாறாகவோ அல்லது பட்டைகளாகவோ கிழித்து, அவற்றை தகுந்த அளவிற்கு வெட்டி, மூலிகை திரவங்களை பயன்படுத்தி பனை பட்டைகளை பதப்படுத்தி உள்ளனர். 
அப்படி பதப்படுத்திய பின்னர் அதனை வெயிலில் உலர்த்தி எழுத்து பணிகளை, எழுத்தாணிகளைக் கொண்டு எழுதியுள்ளனர் சங்கக் காலப் புலவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழர்களும் தனித்தனி ஏடுகளாக எழுதியுள்ளனர். அப்படி எழுதப்பட்டதை ஏடுகளாக சேகரித்து நூலாக வடிவமைத்துள்ளனர்.
அதற்கு சான்றாக திருக்குறள் மற்றும் பழங்கால நூல்கள் சான்றாக உள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் தற்போது எப்படி நமது பயன்பாட்டுக்கு கிடைத்தன?
தொடக்கத்தில் பழம் பெரும் தமிழ் காப்பியங்களும், நூல்களும் வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்தன. எழுத்தாணியும், ஓலைச்சுவடிகளும் தோன்றிய பின்னரே அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைகள் அனைத்தையும் சேகரித்து, அதனை அச்சு வடிவில் நூல்களாக கொண்டுவந்தது தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர்.
 உ.வே. சுவாமிநாத அய்யர்
அவர் தனது வாழ்நாள் இறுதிவரை தொடர்ச்சியாக ஓலைகளை சேகரித்து, அதனை அச்சு வடிவில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 90 க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் நூல்களாக மாற்றியதோடு, 3000 க்கும் மேற்பட்ட ஏடுகளையும் சேகரித்துள்ளார் உ.வே. சாமிநாத அய்யர்.
அவர் மட்டுமல்லாது தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் ஓலைச் சுவடிகளை சேகரித்து அதனை அச்சில் ஏற்றியுள்ளனர்.
மேலும் சென்னையிலுள்ள கீழ்த்திசை நூலகத்தில் பல நூற்றான்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்தும், அவற்றை புதுபித்தும் வருகிறது.
பனையின் பிறப் பயன்கள்
பூமியின் கற்பக விருட்சமாக கருதப்படும் பனை மரத்திலிருந்து பயனுள்ள பொருட்களும், உணவுகளும் கிடைக்கின்றன.
பனையிலிருந்து கிடைக்கும் பொருட்கள்
கூடை, பெட்டி, பாய், ஓலை, விசிறி முதலியவையும் கிடைக்கின்றன. மேலும் பனங் கருக்கு, பாளை, பனங் கிழங்கு, பனை மட்டை, பனை ஓலை முதலியவையும் பனை மரத்தின் உறுப்புகளிலிருந்து கிடைக்கின்றன.
 
பனையிலிருந்து கிடைக்கும் உணவுகள்
பதநீர், கள், கருப்பட்டி, பனை வெள்ளம் முதலிய உணவுகள் கிடைக்கின்றன. இந்த உணவுகள் அனைத்தும் கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து, வைட்டமின், நார்ச்சத்து முதலிய மருத்துவை குணங்கள் அடங்கியவை.
பெரும்பாலும் பனை மரங்கள் ஆசிய நாடுகளில் மட்டுமே வளரக் கூடியவை.

பனையும் - பனை  சார்ந்தத் தொழிலும்
பனையினை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு தொழில்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பனை மரம் ஏறுதல், கள் மற்றும் பதநீர் இருக்குதல், கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் தயாரித்தல் போன்றப் பணிகளை பனைத் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். பெரும்பாலும் இரண்டு மாத கால தொழிலாகவே இத்தொழில் விளங்குகின்றது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கூட தமிழர் திருநாளன பொங்கலன்று கருப்பட்டி மற்றும் பனை வெள்ளம் போன்றவற்றை பயன்படுத்தியே பொங்கல் செய்து, சூரியனுக்கு படையிளிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பனையின் நிலை
விளைநிலங்கள் அனைத்தும் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறி வருவதாலும், மறுபுறம் நெடுஞ்சாலைகள் சீரமைப்புக்காகவும் தமிழ் மரமான பனை மரம் அழிக்கப்பட்டு வருகின்றது.
அதே சமயத்தில் "பசுமைத் தூய்மை அமைப்பு" சார்பில் பனை மரங்களை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மக்களிடையே ஏற்படுத்துப்பட்டு வருகின்றன.
இருப்பினும் தமிழக அரசு தமிழ் பாரம்பரியமிக்க பனை மரத்த பாதுகாக்க முன்வர வேண்டும்.....